புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச சமூகம் இனியேனும் தனது ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் வேறு ஒரு நபரிற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்க முயன்றதன் காரணமாக என்ன நடைபெற்றது என்பதை அது நேரடியாக பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிலைமை மோசமடைவதற்கு சர்வதேச சமூகம் அனுமதிக்க கூடாது எனவும் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்க வேண்டும் எனம் கோத்தபாய வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம் தற்போது நாட்டை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்தி செய்வதற்காகவும் புதிய அரசாங்கத்தை அமைத்து, புதிய அமைச்சர்களை நியமிப்போம் என தெரிவித்துள்ள அவர் மக்கள் விரும்பியதை அவர்களிற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வர்த்தக சமூகத்தினரும் முதலீட்டாளர்களும் அச்சமின்றி முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தான் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கமாட்டேன் எனக்கூறியுள்ள கோத்தபாய எந்த பொறுப்பையும் ஏற்காமலே நாட்டிற்கு சேவைசெய்யவுள்ளதாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பில் தீவிரமாக இருப்போம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.