அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை அமைதிப்படுத்த அரசு முயற்சிப்பதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நன்கொடையில் விதிமீறல் செய்யப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் உள்ள சர்வதேச மன்னிப்புசபையின் இந்திய அலுவலகத்தில் அமுலாக்கத் துறையினர் வியாழக்கிழமை மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்டிருந்தமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவை அமைப்புகளை பயத்தில் ஆழ்த்த அரசு விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என சர்வதேச மன்னிப்புசபை தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பெங்களூரு அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரம் சோதனை இடம்பெற்றதாகவும் 5 அமுலாக்கத்துறை அதிகாரிகள், தங்களின் அலுவலர்களின் மடிக்கணணிகளை அணைக்கச் சொல்லிக் கட்டளையிட்டனர் எனவும் கைபேசியை ; பயன்படுத்தவும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.