அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி; ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹொலிவூட் நடிகருக்கும் இதுபோன்ற பொதிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிரமாக தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு பொதி ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது