பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மம் தீரும் வரை சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல்; அறிவித்துள்ளார். வூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவலை அண்மையில் சவூதி அரசு உறுதி செய்திருந்தது.
இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுப்பதுடன் பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் செக் குடியரசின் பிரதமர் அண்ட்ரெஜ் பேபிசுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அன்ஜலா மோர்கல்; பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.
480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை சவூதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.