ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக இன்று இலங்கை அரசியல் சர்வதேசத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸாநாயக்க, தனது அரசியல் நிலையினை தக்க வைத்துக் கொள்ளவே பாராளுமன்றத்தினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தமை எதேர்ச்சையாக இடம் பெறவில்லை. அதுவொரு அரசியல் சூழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் நாட்டு மக்கள் உட்பட சர்வதேசங்களும் கேள்வி எழுப்பினர் . அனைவரின் கேள்விகளுக்கும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கும் வகையில் உரையாற்றினார். இவரது உரையில் எவ்வித புதிய விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை தற்போது அரசியல் ஒரு வியாபாரமாக மாறியுள்ளதாக கண்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியானது தற்போது மோசடிகள் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் ஜே.வி.பி. சபாநாயகருக்கு கடிதம்
அரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும், மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் ஒரே வழி பாராளுமன்றத்தினை உ டன் கூட்டுவதே ஆகும். ஆகவே இவ்விடயத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ள பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் சபாநாயகருக்கு எழுத்து மூல அறிவித்தலை விடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியானது சாதாரண மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெற்றோலிய வளங்கள் அமைச்சில் இடம்பெற்ற சம்பவமும் இதன் பின்னணியினை மையமாக கொண்டவை இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்க்கமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் நெருக்கடியானது நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சர்வதேசத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அனைவரும் ஒருமித்த கருத்தினையே குறிப்பிடுகின்றனர். மக்கள் ஆணையினை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை செயற்படுத்துங்கள்.