ராமர் கோயில் கட்டும் பணி ஆரம்பிக்கப்படவில்லை எனில், நவம்பர் 29 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விஷ்வ இந்து அமைப்பைச் சேர்ந்த சாது ஒருவர் அறிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஒருமுறை அயோத்தியில் இந்தப் போராட்டத்தை நடத்தியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அயோத்தியில் பாபர் மசூதி-ராமர் கோயிலின் மேல்முறையீடு வழக்கு நேற்றையதினம் உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில் வழக்கு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது அயோத்தி சாதுக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதனையடுத்து அயோத்தியின் தபஸ்வீ சாவ்னி மடத்தின் அதிபதியான சுவாமி பரமஹன்ஸ் தாஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இதனை நவம்பர் 29ம் திகதி முதல் அயோத்தியின் சரயூ நதிக்கரையில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதம், பாஜகவிற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்துவதற்காகச் செய்வதாக தெரிவித்துள்ளார். முன்னர் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்ட போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலையிட்டு நிறுத்தியிருந்ததுடன் பிரதமர் இந்த பிரச்சினை குறித்து ன்னுடன் பேசுவார் எனக் கூறினார் எனவும் ஆனால், அவர் இதுவரையும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்