கொழும்பின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 2,000 காவற்துறையினரும், போக்குவரத்தை சீர்செய்வதற்கு 600 காவற்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காவற்துறையினருக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையின் 10 குழுக்கள், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எந்தவொரு அசம்பாவிதங்களையும் தடுக்க நடவடிக்கை…
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெறும் எந்தவொரு அசம்பாவிதங்களையும் தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு, சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளுக்கு காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் குறித்தே, காவற்துறை அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்…
ஐக்கிய தேசியக் கட்சி, கொழும்பு-03 கொள்ளுப்பிட்டிய பகுதியில் இன்று (30) முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே மேற்கண்டவாறு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது. மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் ஆகியன இந்த இடைக்கால தடையுத்தரவின் கீழ் தடைச்செய்யப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கொழும்பு மேலதிக நீதவானினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.