சலுகைகளும் பறிபோகும் அபாயம்!! ராஜித
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இலங்கைக்கான சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்: ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் இதன் காரணமாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக நியமித்தமை இலங்கை அரசியலில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
1 comment
ஆசியாவின் ஆச்சரியம்- இலங்கை!, என்றும், ஆ, அப்படியா? என்றும் கேட்டு வெளிநாட்டவர்கள் வாய் பிளந்து நிற்கக் காரணம் இல்லாமலா போகும்? இரண்டு கோடி மக்களைக் கொண்ட இச் சிறிய நாட்டுக்கு சமகாலத்தில், இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்புக்கள் என்றால், யார்தான் வாய் பிளந்து நிற்கமாட்டார்கள்?
ஆட்சி மாற்றம் தொடர்பில் திரு. மைத்திரிபால சிறிசேன, சிங்கள மொழியிலான அரசியலமைப்புப் பிரகாரம் நியாயமாகத் தான் நடந்துகொண்டதாகக் கூறுகின்றார். திரு. ரணில் விக்கிரமசிங்க ஆங்கில மொழியில் அமைந்த, ‘Constitution’, ஐ தூக்கிப் பிடிக்கின்றாராம்? ராஜதந்திரத்தில் நரியெனப் பெயர் பெற்ற திரு.JR ஜெயவர்த்தனவையே இவர் விஞ்சிவிட்டார். இப்படியானதொரு விளக்கத்தைச் சர்வதேச ராஜதந்திரிகளிடம் முன்வைக்க எந்த அளவுக்கு முட்டாள் தனம் வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இலங்கைச் சிறுபான்மையினர், சிங்களம் தவிர்ந்த வேறு எந்த மொழியிலான அறிக்கைகள்,
பத்திரங்கள் மற்றும் பதிவுகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள், என்பதே உண்மை!