294
இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையை மையப்படுத்தி நடந்து கொண்டிருப்பது பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி என நாங்கள் படித்துப்படித்து கூறிக்கொண்டிருந்தோம். 2009ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் நாங்கள் அதனை கூறிவந்தோம்.
ஆனால் நாங்கள் கூறும்போதெல்லாம் சிரித்தார்கள். எங்களை பார்த்து நகைத்தார்கள். ஆனால் நாங்கள் கூறியது அப்பட்டமான உண்மை என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டியிருக்கின்றன.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவை சீனா சந்திக்கின்றது. மறுபக்கம் ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் சந்திக்கின்றன. இவ்வாறு சமகாலத்தில் பூகோள அரசியல் நலன்சார் போட்டி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் எங்களுடைய நலன்களை பெற்றுக் கொள்வதற்கான அல்லது எங்களுடைய நலன்களை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்படுகின்றது.
அதற்காக தமிழ்தேசம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இன்றுள்ள பூகோள நலன்சார் போட்டியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர எங்களை எவரும் பாவிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்பி பயனில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் இன் று சம்மந்தன், சுமந்திரனை தேடி செல்வதற்கு தயாராக இல்லை. காரணம் அவர்கள் இந்த பூ கோள அரசியல் போட்டியாளர்களின் கை பொம்மையாக மாறியிருக்கின்றார்கள்.
அவர்கள் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக இந்த அரசாங்கத்தை பாதுகாத்திருக்கின்றார்கள். ஆகவே இன்றுள்ள பூகோள அரசியல் போட்டி தன்மையை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்த கூடிய தரப்புக்களின் இடம் காலியாகவே உள்ளது.
அந்த இடத்தை நிரப்பி தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டு இயங்க கூடிய தரப்புக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே இருக்கின்றோம்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு இப்போதும் கூட பொறுப்புகூறலை நடைமுறைப்படுத்தினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் யாருக்கும் ஆதரவு கொடுப்போம் என கூறுகிறது. பொறுப்புகூறல் விடயத்தில் உள்ளக விசாரணை வலியுறுத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுகின்றது. பின்னர்இதனை நிறைவேற்றுவதால் என்ன பயன்? ஆகவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலைப்பாடுகளில் மிகவும் இறுக்கமாக இருப்பதுடன், விலைபோகாதவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளெட் வெளியேற்றப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையில் இருந்தும், பேரவையின் அனுரசணையுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் உருவாக்கப்பட்ட கட்சியிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த இரு கட்சிகளும் வெளியேற்றப்படாவிட்டால் தமிழ் மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாடுகளில் இறுக்கமாக இருக்க முடியாது.
இதனை நாங்கள் பேரவையின் இணைதலைவர்களுக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் பேரவையின் இணை தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் கூட்டு என்பது கொள்கைரீதியான கூட்டாக இருக்கவேண்டும் என கூறியிருக்கின்றார். அது உண்மையாக இருந்தால் எங்கள் கோரிக்கையை பேரவை நிராகரிக்க இயலாது.
தமிழ் மக்கள் பேரவை இன்று தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையானதும், சக்தி மிக்கதுமான மக்கள் இயக்கமாக மாற்றம் கண்டிருக்கின்றது. மேலும் அது தமிழ் மக்களுடைய நலன்சார் கொள்கைகளில் எந்த சந்தர்ப்பத்திலும், எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்காத மிக இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்ட இயக்கமாகவும் காணப்படுகின்றது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் அவ்வாறூன நிலைப்பாட்டை கொண்ட ஒருவர். அதனை நாம் இதற்கு முன்னரும் பல தடவைகள் கூறியுள்ளதுடன், சீ.வி.விக்னேஸ்வரனை பகிரங்கமாக ஆதரித்தும் வந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இருகட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்து கொண்டிருக்கின்றன.
மறுபக்கம் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் கூறுவது தமிழ் மக்கள் பேரவையும், முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கொள்கையில் மிக இறுக்கமானவர்கள், விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காதவர்கள் என மக்கள் நம்பும் ஒரு நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இரு கட்சிகளும் அவ்வாறன நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கு இடமளிக்கமாட்டார்கள்.
முக்கியமான சந்தர்ப்பங்களில் இவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய தீர்வு திட்டத்தில் பெரும் பங்கை ஆற்றியதும், அந்த தீர்வு திட்டத்திற்காக மக்கள் ஆணையை பெற்றதும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி. அதேசமயம் புளொட் அமைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்து கொண்டு அவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு மக்கள் ஆணை கேட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒற்றையாட்சியை அப்பட்டமாக ஏற்றுக் கொள்ளும் ஆனந்த சங்கரியுடன் இணைந்து மக்கள் ஆணை கேட்டார்.
இன்று அந்த ஆனந்த சங்கரி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கைலாகு கொடுத்து சிலிர்த்துக் கொள்கிறார். இதற்கும் மேலதிகமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு நெடுங்கேணி பிரதேச சபையில் என்ன செய்தது? மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டது. அவ்வாறான ஒரு செயலை தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட இதுவரையில் செய்ததில்லை.
ஆகவே இந்த விடயங்களையும் வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கின்றோம். எங்களுடைய நிலைப்பாடு ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றோம்.
முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கட்சி தொடங்கும் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் வைத்தியர் லக்மன் உரையாற்றும்போது கூட்டு என்பது கொள்கைரீதியான கூட்டாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். அது உண்மையாக இருந்தால் எங்களுடைய கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரிக்க இயலாது. நிரகரிப்பதில் நியாயமும் இல்லை என தெரிவித்தார்.
Spread the love