குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதனால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடி செயல் பாட்டில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம்வேண்டுகோள் விடுத்துள்ளது.இலங்கையில் பல இடங்களில் கடலில் எண்ணெய் வள ஆய்வுகள் கடந்த 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக காலி, களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கரையோர கடல் பரப்பில் இவ் எண்ணெய் வள ஆய்வு நடைபெற்று வருகின்றது.குறித்த எண்ணெய் வள ஆய்வுக்காக நான்கு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இக் காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடும் பட்ச்சத்தில் இவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எனவே பாதுகாப்பது கருதி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய அறிவித்தலாக மன்னார் மீனவர்கள் மன்னார் வடக்கு தெற்குகடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மறு நாள் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி வரை கரையிலிருந்து ஐந்து கடல் மைல் தூரத்துக்கு அப்பால் முற்றாக மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இருந்த போதும் இந் நாட்களில் முற்றாக கடற்தொழில் செய்வதை நிறுத்தினால்தங்கள் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கான சகல அறிவுறுத்தல்கள் ஒவ்வொரு மீனவ கிராம சங்கங்கள் மற்றும் மதஸ்தளங்கள் மற்றும் பொது அறிவித்தல் மூலமும் மீனவர்களுக்கு தெரிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.