அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் என முறைப்பாடு..
அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி காவற்துறை மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் எனக் கூறிய இரண்டு பேர் அலரி மாளிகைக்குள் நுழைந்த போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் எனக் கூறிய இரண்டு பேர் அலரி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். ..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் எனக் கூறிய இரண்டு பேர் இன்று (31.10.18) மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். அலரி மாளிகையில் இருக்கும் சில உபகரணங்களை சோதனை செய்து அவற்றை அப்புறப்படுத்த முற்பட்ட போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதனையடுத்து அலரி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தலையிட்டு நிலமையை கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த இரண்டு பேரும் அவர்களின் அடையாளத்தை ஒப்புவிக்காமலும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்காமலும் உள்நுழைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரினதும் அடையாம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அலரி மாளிகையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு இடமாற்றம்…
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊழிர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரிமாளிகையில் கடமையாற்றிவந்த பெரும்பாலான ஊழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகிறது.