உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்,தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும், நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு இந்த முடிவினை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வெளியட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.