தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வுமையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் மனு கையளிக்கப்பட்ட நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு, தமிழக அரசிடம் ஆலோசனை பெறாமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், இன்று வழங்கிய தீர்ப்பில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.
அதேசமயம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் . மத்திய அரசின் சார்பில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.