பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
26, ஒக்டோபர், 2018 இல் நியமிக்கப்பட்டதாக விபரிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிராக அல்லது அந்த அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவின் கையொப்பத்தின் கீழ் இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 46 (1) மற்றும் 48 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், பிரதமர் பதவி வகிப்பவர் இறந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தாலோ அல்லது பாதீடு தோற்கடிக்கப்பட்டாலோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகத் தோல்வியடைந்தாலோ மட்டுமே பிரதமர் பதவி வெற்றிடமாகும்.
அரசியலமைப்பிலுள்ள எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாமல் மகிந்த ராஜபக்ச 26, ஒக்டோபர், 2018 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டமையும் அதைத் தொடர்ந்து வர்த்தமானி அறிவுப்புகள் 2094/43 மற்றும் 2094/44 மூலம் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் சட்டரீதியானதல்ல என்று மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26, ஒக்டோபர், 2018 அன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் அதன் பின்னர் நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசாங்கமும் நம்பிக்கையற்றன எனக் கூறும் பாராளுமன்ற ஒப்புதலை இந்தப் பிரேரணை வேண்டுகிறது.