வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும் ஒருவர் நேற்று மாலை வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறிப்பிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்த வவுனியா காவல்துறையினர் அங்கு சென்ற அவரை கைது செய்து வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் , சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உள்ளிட்டவர்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரை பார்வையிட அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மையில் வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச்செல்லும் போது தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.