அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி இல்லை எனவும் தாமே அடுத்த ஜனாதிபதி எனவும் கோத்தாபய தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பத்தி ஒன்றில் ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோத்தாபய ராஜபக்ஸ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
‘வியாத்மக’ என்ற சிங்களப் பெயரிலான அமைப்பின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த போதும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் அது கைவிடப்பட்டதாக அந்தப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வியாத்மக’ என்பதை ஆங்கிலத்தில் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு ‘என்று குறிப்பிடுகின்றனர். கோத்தாபய ஏற்கனவே ‘எலிய’ என்ற அமைப்பின் மூலம் கடந்த பலமாதங்களாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கிவிட்டு, தான் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றும் நோக்கிலேயே அவர் அமைச்சுப் பதவியையோ, பாதுகாப்புச் செயலாளர் பதவியையோ கோரவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன் அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டுனனே மகிந்த அணி இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது