முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவையும் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சரத்பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செயற்பட்டதாகவும் இதனையடுத்து சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிகாரத்தில் உள்ள இராணுவ நிலையாக பீல்ட் மார்ஷல் பதவியானது கருதப்படுகின்றது. ஒரு பணியகமும், முழுமையான இராணுவப் பாதுகாப்பும் இப் பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினம் மற்றும் வெளிநாட்டுச் சந்திப்பில் இராணுவச் சீருடையுடனேயே சரத் பொன்சேகா பங்கெடுத்து வருகிறார்.
பொன்சேகா இன்னும் இராணுவ சேவையில் இருப்பதாகவே இப் பட்டத்தின்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பின்னர், மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் பழி வாங்கப்பட்டதாக கூறி பொன்சேகாவுக்கு இழந்த இராணுவப் பதவியும் பீல்ட் மார்சல் என்ற புதிய அதிகாரமும் வழங்கப்பட்டது.
அரச சட்ட நெறிமுறைகளின்படி, பாதுகாப்பு தலைவராக இருப்பதற்கு ஜனாதிபதி அதிகாரம் அளிக்க வேண்டும். சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனவே தனக்கு எதிராக கொலைச் சதியில் தொடர்புபட்ட சரத்பொன்சேகாவின் பதவியை பறிப்பதை அடுத்த இலக்காக ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.