180
தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி அரசியலமைப்புக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றது எனக் கடுமையாக சாடியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ள நிலையில் நீங்கள் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பது சரியானதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(04.11.2018) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடம் கடந்த-02 ஆம் திகதி கூடி ஆராய்ந்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்சவை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதற்கு இரண்டு பிரதான காரணங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கின்றது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர் பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்ற விடயமும், பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஒத்தி வைத்தமை ஜனநாயகத்துக்கு விரோதமான செயலெனவும் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இந்த இரண்டு விடயங்களுக்காகவும் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்திருக்கும் முடிவுக்கெதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி ஆரம்பமான போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முகங்களைப் பார்க்காமல் கொள்கைகளைப் பார்த்துத் தான் முடிவெடுப்போம் எனக் கூறியிருந்தார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தல் ஆகிய விடயங்களுக்கு வாக்குறுதிகள் வழங்கும் தரப்பினருக்கு மாத்திரமே தமது ஆதரவு வழங்கப்படுமெனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவிக்கும் போது அரசியலமைப்பை மீறிய விடயம் சம்பந்தனுக்குத் தெரிந்திருக்கவில்லையே.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் தமிழ்மக்களுக்கு நன்மைகள் எதுவுமில்லாத நிலையில் வரவிருக்கின்ற அரசியலமைப்பும் ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென கூட்டமைப்பு நிபந்தனை விதித்தது. ஆனால், நேற்றைய தினம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறான எந்த விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய பேருக்காகவேனும் எந்தவொரு விடயங்களையும் தமிழருக்கு வழங்குவது தொடர்பாக வெளிக் காட்ட முடியாத நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். இதனால் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய நிலையில் எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்க முடியாத நிலையிலிருக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய மேற்கு நாடுகளின் கைக்கூலிகள். மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை சீனாவின் பின்னணியில் நடந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எஜமானர்கள் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு நீங்கள் நிபந்தனையில்லாத ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க வேண்டுமெனத் தெரியப்படுத்தியிருக்கின்றன.
மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை, இனியும் செய்யப் போவதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலமாகத் தமிழ்மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்கின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் போது வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகிக்கலாம் அல்லது மற்றைய தரப்பை ஆதரிக்கலாம் ஆகிய இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன. நாம் ஒரு தரப்பை ஆதரிக்க முன்னர் அந்தத் தரப்புத் தமிழ்மக்களுக்கு என்ன செய்தது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
வெளிவிவகார அமைச்சராகவிருந்த ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்த மங்கள சமரவீரவும் அதே கட்சியைச் சேர்ந்த ஹர்சடி சில்வாவும் ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்ற விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விசேட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்ட போதும் இந்த விடயத்தையும் ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
தென்னிலங்கையில் மட்டுமே ஜனநாயகம் காணப்படும் நிலையில் வட- கிழக்கில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தர்போதும் மக்கள் காணாமல் ஆக்கப்படுகின்றனர். முன்னாள் போராளிகள் தினமும் இராணுவ முகாமகளுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள். நாங்கள் ஓரிடத்தில் கூட்டம் கூடினால் இராணுவ புலனாய்வுத் துறை அந்த இடத்திற்கு வருகிறது. அரசியற் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீதியில் போராடுகின்றார்கள். மீனவர்கள் போராடுகின்றார்கள். இவ்வாறான துன்பமான நிலைமைகள் தொடரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏற்புடையதல்ல. தொடர்ந்தும் எங்கள் இனம் ஏமாந்து போக இடமளிக்க முடியாது.
நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் வெறும் காழ்ப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களுடைய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்றதொரு அமைப்பு . தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராகப் பல்வேறு சலுகைகள் அனுபவிக்கின்றாரெனில் தமிழ்மக்கள் அவருக்கு அளித்த வாக்குகள் தான் காரணம்.
1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இலங்கை அரசியலமைப்புக்களைத் தாம் ஏற்றுக் கொள்வதில்லை அவர்கள் தமிழ்மக்களிடம் கூறி வருகின்றார்கள். இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று அரசியலமைப்புக்களிலும் எந்தவொரு இடத்திலும் தமிழ்மக்கள் அங்கீகரிக்கப்படவில்லை. அதனுடைய அடிப்படையே தவறென்ற அடிப்படையில் தான் தமிழ்த்தேசிய அரசியல் இதுவரை காலமும் இருந்து வந்தது.
கடந்த-2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும், அன்றைய பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் போர் நிறுத்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. குறித்த போர் நிறுத்த உடன்படிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அங்கீகரித்ததொரு நிலையில் இது அரசியலமைப்பிற்கு முரணானது என்ற விடயம் பலருக்கும் தெரிந்திருந்தது. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அப்போது யாரவது நீதிமன்றத்தை நாடியிருந்தால் போர் நிறுத்த உடன்படிக்கை தூக்கியெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஆனால்,எந்தவொரு சிங்களக் கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
ஏன் கதைக்கவில்லை எனில் அன்றைய சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கை போர் அரங்கில் மேலோங்கியிருந்தது. நான்கு வருட ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் ஊடாக சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய நிலப் பரப்பை நான்கு நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு எளிதாக கைப்பற்றியது. வெளிநாட்டில் பணம் செலவழித்து கொண்டு வரப்படும் ஆயுதங்களைக் கூட கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறிலங்கா இராணுவம் தள்ளப்பட்டிருந்தது. அந்தளவுக்கு இராணுவத்தின் மனநிலை உடைந்து போயிருந்தது.
தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்க வேண்டுமென்ற நோக்கில் சிங்கள அரசாங்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய அனைத்து நாடுகளும் இராணுவத்தின் மனநிலை உடைந்து போயிருப்பதை உணர்ந்து போரை நிறுத்தினால் மாத்திரம் தான் அரசின் பின்னடைவான நிலைமைகளைத் தடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றது. இதன் காரணமாகத் தான் சிங்களக் கட்சிகளை அழைத்து இது உங்கள் அரசியலமைப்பை மீறும் விடயமாகவிருக்கலாம். ஆனால், போர் நிறுத்த உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாத்திரம் தான் விடுதலைப்புலிகள் போரை நிறுத்தி இராணுவத்தைக் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இவ்வாறான வேளையில் இலங்கையின் அரசியலமைப்பு சிங்களத் தலைவர்களிற்கோ அல்லது வேறு நபர்களுக்கோ தேவைப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழர் தாயகத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடுப்பதற்காகவேனும் தாம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலேனும் இந்த விடயத்தைக் கையாள வேண்டுமென சிங்களத் தலைவர்கள் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். தங்களுடைய நன்மைக்காக அரசியலமைப்பு என்ற விடயம் தூக்கி எறியப்படுகின்றது.
கடந்த- 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 2\3 பாதிப்புத் தமிழர் தாயகத்தில் தான் நிகழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழர் தாயகத்தின் கரையோரமும் அழிவடைந்து போயிருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. அதிகளவு அழிவுகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிலேயே ஏற்பட்டிருந்த நிலையில் வெளிநாடுகள் அழிவடைந்து போயுள்ள தமிழர் பகுதிகளை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கில் மீள்கட்டுமானத்தை ஆரம்பிக்கின்றது. இதுவும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் தான் முன்னெடுக்கப்படுகின்றது.
கோடிக்கணக்கான பணத்தை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் தயாராகவிருந்ததொரு சூழலில் அந்தப் பணம் தமிழ்மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக வழக்குத் தாக்கல் செய்து மீள்கட்டுமான உதவியைத் தடுக்கின்றார்கள்.
கடந்த-1983 ஆம் ஆண்டு முதல் 13 ஆவது திருத்தம் காணப்படுகின்றது. தமிழ்மக்களின் தீர்வு விடயத்தில் அத்திவாரத்தைக் கூட 13 ஆவது திருத்தத்தால் இட முடியவில்லை. இந்த நிலையில் தான் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெட்கம் எதுவுமின்றிக் கூறுகின்றது. அரசியலமைப்பு சாதாரணதொரு சட்டமல்ல. இந்த நாட்டின் பிரதான சட்டம். 13 ஆவது திருத்தம் இனப் பிரச்சினைக்குத் தீர்வென்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 20 வருட காலமாக குறித்த அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலிருப்பதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே வாய் திறந்து சொல்கின்றது. ஆனால், இந்த விடயம் சம்பந்தமாக இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையே.
சட்டத்தை மீறி நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிய அனைத்து அரசாங்கங்களுடனும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றியமையே யதார்த்தம்.
அரசியலமைப்பை மீறி பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தமையின் உள்நோக்கமென்ன? பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கட்சி தாவ எடுத்துள்ள முடிவு போன்று தங்களுடைய சுயநலன்களுக்காவே மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த அரசிலிருந்து பிரிந்து மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்று சேர்ந்ததே ரணில் விக்கிரமசிங்க தரப்பு தமிழ்மக்களுக்குச் சார்பாக செயற்படுகின்றார்கள் என்ற அடிப்படையிலேயே ஆகும். எனவே, தென்னிலங்கை கட்சிகளினதும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் மோசடிகளை எமது தமிழ்மக்கள் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கொள்கைகள் காணப்படலாம். ஆனால், ஊடகங்கள் நாங்கள் கூறுகின்ற கருத்துக்களை தயவு செய்து முழுமையாகப் பிரசுரியுங்கள். அவ்வாறு பிரசுரித்த பின்னர் நாங்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம். நாங்கள் கூறும் கருத்துக்கள் தனிப்பட்ட ஒருவருடைய பிரச்சினையல்ல மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
1 comment
TNA
இந்தியா மற்றும் மேற்குலகத்தின் நலனுக்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்த நாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைக் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தை சம்பந்தர் பெறவில்லை.
எப்பொழுதும் போல் தமிழர்களின் தேர்தல் ஆணையை உதாசீனம் செய்து, சுயநலத்தை முதன்மைப்படுத்தி, தனது நண்மைகளை தொடர்ந்து அனுபவிக்க உத்தரவாதம் பெற்றார் என்று கூறப்படுகின்றது.
TNPF
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தொலைநோக்கு (Vision) என்ன, தொலைநோக்கை அடையத் தேவையான இலக்குகள் (Goals) என்ன மற்றும் இலக்குகளை அடையத் தேவையான பணிகள் (Tasks) என்ன என்பதை ஒழுங்கு படுத்தி, தெளிவாகவும், குறிப்பாகவும், யதார்த்தமாகவும் உத்தியோகபூர்வ அறிக்கையாக கஜேந்திரகுமார் தமிழ் மக்களுக்குச் சொன்னால் மேலும் விளக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் நன்மைகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வரை என்ன செய்துள்ளது?