சனி முழுக்கு 15 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்
ஆள் ஆஸ்பத்திரியிலை படுத்திருக்கிறார் எண்டு கேள்விபட்டுட்டன். என்ன வருத்தமோ தெரியாது.ஒருக்கா எட்டிப்பாத்திட்டு வருவம் எண்டிட்டுக் காலமை பஸ்ஸைப்பிடிச்சு ஓடினன். சனத்துக்கை நரிஞ்சு திரிஞ்சு ஒரு மாதிரிப் போய் ஆஸ்பத்திரி வாசலிலை இறங்கிவிட்டன். அடைச்சுவிட்ட கோழியைத் துறந்துவிட்ட மாதிரிக் கிடந்திது. உடுப்பெல்லாம் கசங்குண்டு போச்சுது. பறவாயில்லை ஆஸ்பத்திரிக்குத் தானே போறம் எண்டிட்டுப் போனால் , வாட்டு எது எண்டதை மறந்து போனன். யோசிச்சுக் கொண்டு நிக்கேக்கை சின்னத்துரையின்ரை பெடி சுடுதண்ணிப் போத்திலோடை வாறான். “அரசடியான் என்ரை கூடத்தான் நிக்கிறான்” எண்டு மனசுக்கை நினைச்சுக் கொண்டு அவனோடை ஒட்டிக் கொண்டு வாட்டுக்குப் போனால், சின்னத்துரையின்ரை வலது காலுக்குப் பந்தம் சுத்தி ஆளைப் படுக்கையிலை விட்டுக் கிடக்கு. என்னடா நடந்தது? எண்டு சின்னத்துரையைக் கேட்டன். முகத்தை மற்றப் பக்கம் திருப்பிப் போட்டான். கதைக்கேல்லை. உடனை சின்னத்துரையின்ரை மேன்தான் சொன்னான். “ஐயாவுக்கு நடந்ததைச் சொல்ல வெக்கமாக்கிடக்கு. ஆளுக்குச் சுவிஸுக்குப் போக பொன்சர் ச ரிவந்திட்டுது. அப்ப வாற மாதம் போறத்துக்குரிய ஆயுத்தங்களைச் செய்தவர். அப்ப அண்ணை அங்கிருந்து சொன்னவன் ஆளுக்கு ஒரு சோடி தடிச்ச துணியிலை இரண்டு நீட்டுக் காற்சட்டையும் தைச்சுக் குடுத்துவிடு. வந்தாப் பிறகு இஞ்சை மாலிலை பாத்து நல்லதா வாங்கலாம்.” எண்டு சொன்னபடியா இந்து கொலிஜ்ஜுக்கு முன்னாலை இருக்கிற ரெயிலர் கடையிலை ஆளைக் கூட்டிக் கொண்டு போய் இரண்டு காற்சட்டையைத் தைக்கக் குடுத்தன். அவதிப்பட்ட மனுசன். நேற்றைக்கு எனக்கும் பறையாமல் களவாய்ப் போய் ரெயிலரிட்டை அதை எடுத்துக் கொண்டு வந்து அறையைப் பூட்டிப்போட்டு நிண்டு, தான் கொண்டு வந்த காற்சட்டை தனக்கு அளவோ எண்டு சொல்லிப் போட்டுப் பாத்தவர். போட்டவருக்கு அதைச் செவ்வயாக் கழட்டத் தெரியேல்லை. கால்தடக்கி விழுந்தாப்போலை கால் குழச்சுக்கை வெடிச்சுப் போச்சு. அதுதான் ஆளைக் கொண்டு வந்து விட்டுக்கிடக்கு. உள்ளதைச் சொன்னால் என்ன அண்ணை, ஆளுக்கு அவதி கூட. பிறந்த நாள் தொட்டு இண்டு வரை ஆள் வேட்டியோடைதானே திரிஞ்சவர். இப்ப வயசென்ன? எழுபத்தி மூண்டு. அப்ப உவர் என்ன செய்திருக்க வேணும் காற்சட்டை எடுத்துக் கொண்டு வந்தவர் நாங்கள் நிக்கேக்கை அதைப் போட்டுப் பாத்திருக்கலாம். ஆசை எல்லாருக்கும் இருக்குத்தான். உது அவதிப்பட்ட பேராசை. பாருங்கோ இப்ப கிடந்து அனுபவிக்கிறார். இப்ப அடுத்த மாசமளவிலை போகேலுமோ தெரியாது. ரிக்கற்றைப் போட்டிட்டு அங்கை நிண்டு அண்ணை கத்திறான். நான் என்ன செய்யிறது? பொன்னம்பலமண்ணை சொல்லுங்கோ” எண்டான்.
“உந்த விசர்க்கதையை நிப்பாட்டு” சின்னத்துரை மேனைப் பாத்து கடுப்பா க் கத்தினான். “நான் என்ன சின்ன பவாவே? ஆரையேனைப் பிடிச்சுக் கொண்டு காற்சட்டையைப் போட்டுப் பாக்க? உவருக்கு முதல் காற்சட்டை தைச்சுக் குடுத்தது நான். “அப்பு எனக்குக் காற்சட்டை போட ஆசையாக் கிடக்கு” எண்டு கேட்ட உடனை ஆளைச் சைக்கிளிலை ஏத்திக் கொண்டு யாழ்ப்பாணம் பெரிய கடையிலை உள்ள ரெயிலரிட்டை போனன். அவரிட்டை ஒண்டில்லை இரண்டு காற்சட்டை தைச்சுக் குடுத்தனான். இப்ப உவன் எனக்குக் கதை சொல்லுறான். எனக்கு ஒண்டும் தெரியாதாம். காலத்தைப் பாத்தியே பொன்னம்பலம் !” எண்டு சின்னத்துரை சத்தம் போட்டவன். அப்பதான் பாத்தன் சின்னத்துரைக்கு வந்த ரோஷத்தை. பிறகு அங்கை நிண்டு கொஞ்ச நேரம் சின்னத்துரையோடை பல கதையளையும் கதைச்சுப் போட்டு வந்தன் எண்டு வையுங்கோவன்.
பிறகுதான் கேள்விப்பட்டன் ரெயிலர் இளம் பெடியளுக்குத் தைக்கிறமாதிரிக் கால் கீழ்க் குழாயளை ஒடுக்கமாத் தைச்சுக் குடுத்திட்டாராம். அது போட்டுக் கழட்டேக்கை பெரு விரல் மடங்கினாப்போலைதான் சின்னத்துரை முகத்தறிய விழுந்தவனாம். விழுந்தாப்போலை முட்டிப் பக்கம் அடி விழுந்து கால் பிரண்டு போச்சுது. இப்ப பாக்கப் போனால் சின்னத்துரை ஆசைப் பட்டதும் பிழை இல்லை. போட்டுப் பாத்ததும் பிழை இல்லை. பிழை ரெயிலரிட்டைத்தான் போலை கிடக்கு. ஆனாலும் சின்னத்துரையும் அனுபமில்லாத வேலையைச் செய்ய முன்னம் ஆரிட்டையேன் கேட்டிருக்கலாம். இப்ப என்ன நடந்திருக்கு? ஆளுக்குப் பொன்சர் ரெடி. அடுத்த மாசம் போக வேணும். ரிக்கற்றும் போட்டாச்சு. ஆனால் அதுக்கை சின்னத்துரைக்குச் சுகம் வந்து போகேலுமோ தெரியாது. அப்ப நட்டம் ஆருக்கு? சின்னத்துரையின்ரை பெடிக்குத்தானே? இனி அவன் போற திகதியை மாத்த வேணும் எண்டால் கூடக் காசு குடுக்க வேணும். எல்லாம் வில்லண்டந்தான்.
எப்பவும் ஒரு மனுசன் தனக்குத் தெரியேல்லை எண்டு வெளியிலை சொல்ல வெக்கப்படப்பிடாது.எல்லாரும் பிறக்கேக்கை எல்லாத்தையும் அறிஞ்சு கொண்டு வாறேல்லை. இஞ்சை வந்தாப் பிறகுதான் எல்லாத்தையும் படிச்சு மற்றவைக்கும் படிப்பிக்கிறம். அதுக்கை எல்லாத்தையும் தங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறது. உதுக்கு ஒரு முசுப்பாத்திக் கதை சொல்லுறன் கேளுங்கோவன். இப்ப அஞ்சாறு மாதத்துக்கு முன்னம் ஒருபெடி என்னைக் கேட்டார் “பொன்னம்பல அண்ணை. கதிர்காமத்துக்குக் கெதியாப் போறதுக்கு எது சுகமான கிட்டின வழி” எண்டு. நான் எல்லாத்தையும் வடிவாச் சொன்னன். நேற்றைக்கு சந்தையிலை அவரிட்டை வேறை ஒராள் தான் நேத்திக்கடனுக்குக் கதிர்காமம் போக வேணும் எண்டு சொல்லி அவரிட்டை வழியைக் கேக்க. ஏதோ தான் போய் வந்த மாதிரி நான் சொன்னதுக்கு ப் பன்னா, ம் மன்னா போட்டு வலு பொழிப்பாச் சொல்லிப்போட்டுத் திரும்பினான். நான் நிக்கிறன். ஆள் மெதுவா நழுவிவிட்டார். உப்பிடித்தான் எல்லாரும். தெரியாததைச் தெரிஞ்சதெண்டு சொல்லுவினம். தெரிஞ்சதெண்டதைத் தெரியாதெண்ணுவினம். ஆக்கள் முந்தின மாதிரி எல்லாம் இல்லை. இப்ப சனத்திட்டைத் திருகுதாளம் கூடிப்போச்சுது.
- பொஸிற்றிவ் பொன்னம்பலம்