நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்ற நெருக்கடியில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் தீர்மானிக்கும் ஆசனங்களை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனம் செய்துள்ள நிலையில் மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதனை ஆதரிக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள போதிலும் இவ்விடயத்தில் தமது கட்சி நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த சூழலில் மக்கள் விடுதலையை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகின்றது.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இதனை ஆதரிக்க வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தும் எனவும் கூறப்படுகின்றது.