முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆட்சியமைக்கும் முயற்சிகளிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிசேன தனது அடுத்த கட்ட திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது எதிரணியில் ஒரு பகுதியினர் மற்றும் ஐக்கியதேசிய கட்சியினரை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிசேன முயல்கின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ராஜிதசேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் நேற்று சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக புதிய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அவர்கள் ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சமமான அமைச்சரவை ஆசனங்களை ஒதுக்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எந்த ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார். சஜித் பிரேமதாசாவிற்கு பிரதமர் பதவியை வழங்கதயார் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.