சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதனையடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளன.
கடந்த மாதம் கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடுன் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த முறையும் போராட்டம் நடைபெறலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கெமாண்டோ படையினர், 100 பெண் காவல்துறையினர் உள்பட 2,300 காவல்துறையினர் ; பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.