குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான கட்டித்தில் இருந்து இன்று திங்கட்கிழமை(5) காலை இராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது.
குறித்த கட்டிடம் இராணுவத்தினரால் மன்னார் பிரதேசச் செயலகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
-எனினும் குறித்த கட்டிடத்தில் இருந்த இராணுவம் முழுமையாக வெளியேறவில்லை.அவர்கள் வெளியேற கால அவகாசம் கோரி இருந்தனர்.
-இந்த நிலையில் குறித்த கட்டிடத்தில் இருந்த இராணுவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கட்டிடத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது.
-இதன் போது மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி குறித்த கட்டிடத்திற்கு வருகை தந்து மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபையின் உப தலைவர் ஜஸ்ரின் சொய்சா உள்ளிட்ட குழுவினரிடம் குறித்த கட்டிடத்திற்கான ஆவணங்களை வைபவ ரீதியாக கையளித்தார்.
-குறித்த கட்டிடத்தை பொறுப்பேற்றுக் கொண்ட மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபை மேலதிக பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இராணுவத்திற்கு மன்னார் நுழைவாயில் ஒதுக்கப்பட்ட காணியினை இராணுவ உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.