ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர் பிரச்சினையை தீர்க்கும் தார்மீகக் கடமையொன்று இருப்பதாகவும் அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருப்பதை அவர் மறந்திருக்க மாட்டார் எனவும் தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இரா. சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று தற்போதைய சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன தவற விடக்கூடாதென கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவ் விடயத்தில் அவருக்கொரு தார்மீகக் கடமையொன்று இருப்பதாகவும்அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருக்கின்றதை அவர் மறந்திருக்க மாட்டார் எனவும் எதிரக்;கட்தித் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் தற்போது மாறியிருக்கின்ற அரசியல் சூழல் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் காத்திரமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
“அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்”.
இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும். இந்த மரத்தில் காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும். இது பழுத்து பழமாக மாறாது. அந்த மரத்திற்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும் நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது. ஆனால் அது பழுக்காமல் வெடித்து சிறிய பஞ்சுகளாக காற்றில் பறந்தது. தினமும் காத்து இருந்த அந்தக் கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது. இதுதான் சம்பந்தருக்கு நடந்தது, நடக்கின்றது மற்றும் நடக்கப் போகின்றது.
இதை உணர்ந்து, நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பிரச்சனைகளை தீர்க்கும் செயல்முறையை பின்பற்றி, இன்று வரை உள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிந்து, அவற்றை நீக்கும் செயல்களை நடை முறைப்படுத்த பெரு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும்.
சம்பந்தர் குழு பிரச்சனைகளைத் தீர்க்க சில முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் வேகமும் செய்யும் பணிகளும் போதாது. வேகமாகச் செயல்பட்டால் அரசாங்கமும் வேகமா செயல்படக் கூடும்.
நாம் தற்போதைய வாய்ப்புகளை தவறவிடக் கூடாது. ஐநா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை நடை முறைப்படுத்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தங்கள் பங்கை முழுமையாக செலுத்தி, பொது மக்களுக்கு முன்மாதிரியாக, தங்கள் செயல்திறனை மேம்படுத்தி, பயனுள்ள பணிகளை துரிதமாகச் செய்ய வேண்டும்.
இத்துடன் அவர்கள் தங்கள் தவறுகளை கண்டு பிடித்து, அவற்றை ஏற்று, திருத்திக்கொண்டு, திட்டங்களைத் தீட்டி, திறம்பட முகாமைத்துவம் செய்து தமிழர்களளை காப்பாற்றவேண்டும்.
காத்திருந்து காத்திருந்து ஏமாற்றப்படாமல் தமிழ்த் தலைவர்கள் அரசியல் தீர்வை பெற திட்ட அட்டவணையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும். இதற்கு சோம்பேறிகளாக இல்லாமல் தினமும் கடினமாக உழைக்க வேண்டும்.