அடுத்த தீபாவளிக்கு்ள் எதிர்பார்ப்பு நிறைவடையும்!
கடந்த 2015ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை மறந்து விடவில்லை. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றே பிரதமர் மாற்றத்தை கொண்டு வந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் காட்டிய அக்கறையீனம் காரணமாகவே அவரை பதவியில் இருந்து நீக்கியதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பில் சாதகமான புரிந்துணர்வொன்றினை புதிய பிரதமருடன் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2015ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை மறந்து விடவில்லை எனவும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் தாம் பொறுப்புணர்வுடனேயே செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி வடக்குக் கிழக்குச் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களுடைய பிர்ச்சினைகள் தீர்க்கப்படும் வகையில் அது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரசியல் தீர்வு பிரிக்கப்படாத நாட்டுக்குள் அவசியமென்பதை தாம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவ்வாறான தீர்வு எட்டப்படும் வரை நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் கடந்த மூன்றரை வருடங்களாக தம்முடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சி காட்டிய அசமந்தப் போக்குக் காரணமாகவே அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
தற்போது புதிய அரசாங்கம் என்ற வகையில் விரைந்து வினைத்திறனுடன் செயற்படத் தீர்மானித்துள்ளதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்கள் உட்பட அனைவருடைய எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற முடியுமென்ற நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
பொய்யரும், பித்தலாட்டக்காரருமான திரு. மைத்திரிபால சிறிசேன, ஜனநாயக விரோத ஆட்சி மாற்றத்துக்கான காரணமாக இன்னும் எதையெல்லாம் சொல்லப் போகின்றார்?
தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில், கடந்த 3 1/2 வருடங்களில் முன்னேற்றமெதுவும் ஏற்படாமைக்கான காரணத்தை இன்னுமொருவர் தலையில் சுமத்தி இவரால் தப்பித்துவிட முடியாது.
மேலும், திரும்பத் திரும்ப காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பொய்யையே கூறுவதனால், அது உண்மையாகிவிடப் போவதுமில்லை, அதை யாரும் நம்பப் போவதுமில்லை.
2004 ம் ஆண்டில் இருந்து 2015 ம் ஆண்டு வரையில் பதவியில் இருந்த திரு. மகிந்த ராஜபக்ஷ கண்டுவிடாத இனப் பிரச்சனைத் தீர்வு எதையும் இனிமேல் காணப் போவதில்லை. பயங்கரவாதப் பிடியில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்காகவே போரை முன்னெடுத்ததாகக் கூறும் திரு. மகிந்த ராஜபக்ஷவுக்கு, அதை நிரூபிக்கப் போதியளவு காலவகாசம் கிடைத்திருந்தும், 2009-2014 வரையான காலத்தில் எதைச் சாதித்தார்? உங்கள் அநீதியான நடவடிக்கைகளை மறைக்கப் புதிதாக/ சிறு பிள்ளைத் தனமாக, நியாயம் கற்பிக்க முயல வேண்டாம். நீங்கள் இருவரும் என்றைக்கும் பேரினவாதச் சிந்தனைகளில் இருந்தும், மத வெறியில் இருந்தும் மாறப் போவதில்லை.
கால காலமாகத் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழர்கள், தமக்கான தீர்வு குறித்து எந்தத் தெளிவுமற்று இருக்கின்றபோதும், சிங்கள ஆட்சியாளர்களை என்றைக்கும் நம்பப் போவதில்லை.