வவுனியா மாவட்டத்தின் சமனங்குளம் பகுதியில் உள்ள கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் புத்தர் சிலை ஸ்தாபிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. சமனங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் அப் பகுதி மக்களால் காலம் காலமாக வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்த ஓர் ஆலயமாகும். கடந்த கால போர் நெருக்கடிகளின்போது இவ்வாலயம் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள் என்பன கொண்டு வந்து சேர்க்கப்பட்டு கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திடீரென இப் பகுதிக்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டட பொருட்கள் இவ்வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் விகாரையொன்றை அமைக்க முற்பட்டமை காரணமாக பிரதேச மக்களின் கடுமையாக எதிர்ப்புக்கு இத் திணைக்களம் உள்ளானது.
பரம்பரை பரம்பரையாக தாம் வழிபட்டு வரும் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமென கூறி புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் முதலியோர் கல்லுமலைக்குச் சென்று நிலவரங்களை பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் உரையாடியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தொலைபேசி வழியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த இடத்தில் அனுராதபுரக் காலத்தின் புராதான சின்னங்கள் உள்ளதாகவும் அவைகளை அழியாமல் தடுப்பதற்கு இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாகவும் தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளர் கூறியுள்ளார்.