பங்களாதேசின் டாக்கா நகரில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டாக்காவில் விடுதியொன்றில் இந்திய மாணவி உள்பட 20 வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன்பின் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே பங்களாதேசில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை ராணுவத்தினரும் காவல்துறையினரும் தேடி வருகின்ற நிலையில் அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜமாயத்துல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ஷமில் கோர்ஷெட் ஆலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலமும் அவரது நண்பர்களும் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியை முற்றுகையிட்ட காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது காயங்களுடன் ஆலம் பிடிபட ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.எனினும் ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது