பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய அரச அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெடரல் விசாரணை முகாமையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில இது தெரிய வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 27, 28 திகதிகளில் சுமார் 12 வங்கிகளைச் சேர்ந்த 8,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் இணையத்திருடர்களால் முடக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாங்க் இஸ்லாமியிலிருந்து 2.6 மில்லியன் தொகை திருடப்பட்டுள்ளது எனவும் சர்வதேச பணப்பரிமாற்ற அட்டை மூலம் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது எனவும் இதனையடுத்து குறித்த வங்கி தனது இணைய வர்த்தக நடவடிக்கை, மற்றும் அட்டை மூலமான பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் களவாடப்பட்ட 2.6 மில்லியன் தொகையினை வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கியே செலுத்தி விட்டது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும் வங்கி இணையதளம் முடக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி வங்கிகள் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை மறுத்துள்ளது.