மத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 77 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமரூனில் பமிண்டா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் எனினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடிலேயே இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கமரூனில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே பிரிவினைவாதிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதனால் இந்தக் கடத்தலில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அரச தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.