குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆயுதத்தால் பேச முயற்சித்தவர்களுக்கும், இராணுவத்துக்குமே பிரச்சினைகள் இருந்தன என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வும், யாழ்.மாவட்ட இராணுவ தளப திக்கு கௌரவ பட்டம் வழங்கும் நிகழ்வும் இன்று பலாலியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது. அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
போர் காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களை சந்தித்தார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். 30 வருடகால போரில் பல அழிவுகள் இடம்பெற்றதும் தெரியும். அவற்றை 9 வருடங்களில் மீட்டெடுக்க முடியாது.
ஆனால் இராணுவத்தால் முடிந்தளவு மீட்டுக் கொடுப்பதற்கு இராணுவம் முயற்சிக்கும். அந்த முயற்சியில் 100 வீதம் இராணுவம் முயற்சிக்கும். குறிப்பாக இராணுவம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது, மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கிறது,
வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலாக இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் கூட அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்னை மரங்களையும்,
பனை மரங்களையும் இராணுவம் நாட்டியிருக்கின்றது.
இதேபோல் கரையோர வள பாதுகாப்பு மற்றும் வனவள பாதுகாப்பு போன்றவற்றிலும் இராணுவம் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. யாழ்.மாவட்ட மக்கள் நின்மதியாக வாழும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றார்.