வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, தாம் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.வி.விக்னேஷ்வரன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்ததுடன், அந்த வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்திருந்தது.