தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி வழங்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியுள்ளது.
தற்போது படத்தை பார்த்த நடிகை கௌவுதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்துள்ளது. இதேவேளை தடைக்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை என்றும் படக்குழு கூறுகின்றது.
மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவிக்கும் பட்சம்மில் டெல்லி நீதிமன்றத்திற்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. . ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2-வது மறு சீரமைப்பு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதாக படக் குழு கூறுகின்றது.
காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க உறுதியுடன் இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தினர் கூறுகின்றனர்.