நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ள சிம்மாசன பிரசங்கத்தினை கேட்பதற்கு நாட்டு மக்களும் , சர்வதேசமும் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னயிணின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஜனாதிபதி மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக கால அவகாசத்தினை ஏற்படுத்த முயற்சித்தால் இந்த நிலையற்ற அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகிந்த தரப்பினரால் ஒரு போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த முடியாது எனவும் 19 நாட்களாக நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் தயார்…
அவமதிப்பு, அவமரியாதைகளுக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) பயமில்லை என்றும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தமது கட்சி முன்னெடுக்குமென்றும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் ஜனநாயகம், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மூன்று வேளை குறித்து சிலர் பேசுகின்றனர் என்றும், டில்வின் சில்வா மேலும் கூறினார்.