கொங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெனி நகரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பெனி நகரம் வட கிவு பகுதியில் அமைந்துள்ளது எனவும் சுமார் இருபத்து ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது எனவும் தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையிலும் அங்கு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மருத்துவ குழுக்களை தாக்குவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொங்கோவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்ற நிலையில் கடந்த ஜுலை மாதம் முதல் இபோலா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 291 பேர் இபோலாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், அதில் 201 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார பணியாளர்களை தாக்க வேண்டாமென ஐ.நா அமைதி காக்கும் படையினர் ஆயுத குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கோவில் 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்து முறை இபோலா வைரஸ் தாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.