குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரநடுகையும் மலர் கண்காட்சியும் நேற்று (சனிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஈழத்தில் இன்று அரசியல் தலமைக்கான வெற்றிடம் உள்ளது. தந்தை செல்வா காலத்தில் அகிம்சை வழியில் போராடக்கூடிய அரசியல் தலைமை வலுப்பெற்ற பின்னர் பல கட்சிகள் உருவாகின. எம்முன்னால் இருக்கும் சவால் சிதறிக்கிடக்கும் எமது தமிழ் சமூகத்தை ஒருங்கிணைப்பது என்பது முதன்மையானது.
தாயகத்தில் ஒரு பங்கு, புலம்பெயர் நாடுகளில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள தமிழ் சமூகம் ஒரு பங்கு என தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் நாம் ஒரே அடையாளத்தை கொண்டிருந்தாலும் ஒருமித்த கருத்தில் இயங்குகிறோமா என்பது எம் முன்னால் இருக்கும் சவாலாகவுள்ளது.
எனவே சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அறிவான ஒரு தலமை, பகைவர்களை தெளிவாகப் புரிந்து அவர்களின் இராஜதந்திரங்களுக்கு ஈடுகொடுத்து முறியடிக்கும் தலைமை தற்போதைய தேவையாக இருக்கின்றது.
ஆயுதம் ஏந்திப் போராட வாய்ப்பில்லை என்ற நிலையில் இந்த நாடாளுமன்ற ஜனநாயக வழியில் போராடுவதற்கு ஏற்ற ஒரு தலைமை, சமரசம் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை எமக்கு தேவைப்படுகிறது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.