எவர் தடுத்தாலும் தேர்தல் நடைபெறும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதே தமது பிரதான திட்டம் எனவும் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு செல்லவேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர்குறிப்பிட்டார்.
தமது இத் தீர்மானம் சரியா, தவறா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருப்பதாகவும் மக்களுக்குள்ள இந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால்கூட சவாலுக்குட்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்ட மகிந்த, அவ்வாறு நிகழ்ந்தால் அது நாட்டு இறைமைக்கும் மக்களுக்கும் எதிரானது எனவும்தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் தேர்தலுக்கு ஏன் அச்சப்படுகிறார்கள் என தமக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமக்கு தேர்தல் குறித்த அச்சம் இல்லை எனவும் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருப்பதாகவும் தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் தேர்தலுக்குச் செல்வதற்கும் அதிகாரம் இருக்கிறது எனவும் எது ஜனநாயகம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அறிவித்தபடி ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச இதனை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் கட்சியின் தலைவர்களும் சர்வதேச நாடுகளின் இராஜாதந்திரிகளை சந்தித்து நாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து விளக்கமளித்து வருவதாகவும் அவர்கள் கண்டிப்பாக தமது தீர்மானம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திய மகிந்த , அவர்களை விரைவில் சந்தித்து தமது தீர்மானம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும்; தெரிவித்தார்.