ஸ்ரோபெரி பழங்களில் ஊசிகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நீண்ட மற்றும் கடினமான விசாரணைக்கு பின்னர் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரோபெரி பழங்களில் ஊசியிருப்பது குறித்து சுமார் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நாடு தழுவிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் இந்த முறைப்பாடுகளில் சில போலியானவை எனவும் சில சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையினால் விவசாயிகள் தொன் கணக்கான ஸ்ரோபெரி பழங்களை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்பட்டதுடன் பல்பொருள் அங்காடிகள் ஸ்ரோபெரி விற்பனையை நிறுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு 10 முதல் 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது