அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் ஒரே பார்வையில்!
ரணில் விக்ரமசிங்க
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று ரீதியான வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளதாகவும் முன்னோக்கிச் சென்று மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் என்றும் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அலரிமளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – ரிஷாட் பதியுதீன்
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது – ராஜித
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின, நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மீ்ண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, ஆட்சியமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராஜித, சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், மஹிந்தவை பிரதமராக்கி சட்டவிரோதமாக அமைத்த அரசாங்கத்தை நாளைய தினத்துடன் தூக்கி எறியவுள்ளதாகவும் ராஜித்த மேலும் குறிப்பிட்டார்.
200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி – எம்.ஏ சுமந்திரன்..
இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை – ரவூப் ஹக்கீம்
சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உச்ச நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – சஜித் பிறேமதாச
நாட்டில் நீதி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் உச்ச நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய சஜித், சட்டவிரோதமான ஆட்சியை கைப்பற்றி நாட்டில் இரத்த ஆறை பெருக்கெடுக்க மேற்கொண்ட சதியும் உச்ச நீதிமன்றினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மகத்தான வெற்றியை மக்கள் மிகவும் அமைதியாகவும், ஏனையவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டாடுமாறும் சஜித் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மைத்ரியின் தீர்ப்பிற்கு எதிராக வீதிக்கு இறங்கியிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மை இன்றைய நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.