அரசியல் யாப்பை மீறி எவரும் செயற்பட முடியாது என்பதையே உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையின் பின்னர், அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மைக்கு இன்று பதில் கிடைத்துள்ளதுடன் அரசியல் யாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அரச ஒழுக்க விழுமியங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பை கிழித்தெறிய முற்பட்டபோது, அரசியல் யாப்பை உதைத்தெறிந்து செல்ல முடியாதென இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ரணில் தற்போது ஆட்சேபங்களை தெரிவிக்க நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் அதற்குரிய காரணங்களை தெரியப்படுத்தும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றியமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ரணில், அவரின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படுவதாகவும் ;. இதற்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் மும்மத தலைவர்களுக்கும் ரணில் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இவை அனைத்தையும் மக்களின் அடிப்படை உரிமையையும் அரசியல் யாப்பை பாதுகாக்கவும் முனைந்ததாக கூறிய ரணில், இது தற்காலிக வெற்றி எனவும் தொடர் போராட்டத்தை வெற்றிகொள்ளும் விதமாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டவில்லை எனவும் மாறாக ஜனாதிபதியே கூட்டியுள்ளதாக கூறிய அவர், நாளை நாடாளுமன்றில் தமது அதிகாரம் காட்டப்படும் எனவும் அரச ஊழியர்களை அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுமாறு கேட்டு கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.