குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி நறுவிலிக்குளம் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது தொல் பொருள் அகழ்வு ஆராட்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மாந்தைக்கு நிகரான துறைமுகப்பட்டினமாக முன்னர் செயற்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் காணி வழங்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி உதவியுடன நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
-இதன் போது குறித்த மைதான பகுதியில் மண் அகழ்வு செய்யப்பட்ட போது பழங் காலத்து மக்கள் பாவனைப் பொருட்களான மட்பாண்டங்கள் , இரும்புத்தகடுகள் கற்கன் என சில பொருட்கள் வெளிவரத் தொடங்கியது. இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து குறித்த இடத்துக்கு வந்து பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இவ்விடத்தில் பழங்கால குடிகள் இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமையினால் முறையான அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்ததோடு, விளையாட்டு மைதானத்தின் கட்டு மாணப்பணிகளுக்கு தடை விதித்திருந்தனர்.
இதனையடுத்து நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தின் அகழ்வுப்பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சுமார் பத்து நாட்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வழமையை போலவே மட்பாண்டங்கள் , இரும்பு கலந்த மண், பொன் நிறத்தினாலான கற்கள் குறித்த அகழ்வில் இருந்து மீட்கப்பட்டது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மைதானத்தினை அண்டி காணப்படும் பாரிய அகழிகள் மாந்தைக்கு நிகரான துறைமுகமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது .
அத்துடன் ஆதிப் பழங்குடி மக்கள் பெருமளவில் வாழ்ந்திருக்கின்றார்கள்.அவர்கள் வணிகர்களா? அல்லது பூர்வ குடிகளா என்பது இப்போது தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.