குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் இவற்றுக்கிடையில் மிகவும் கஸ்டப்பட்டு பிடித்து வரும் மீன்களை கொள்வனவு செய்யும் முதலாளிகள் மிகக் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் தெரிவிக்கையில்,,
-சில முதலாளிமார்கள் தொழிலாளிகளுக்கு கடன் கொடுத்துள்ளார்கள். படகு, இயந்திரம், வலைகள் எடுத்து கொடுத்துள்ளார்கள். இதனால் நாங்கள் பிடிக்கும் மீன்களை அவர்களுக்கே கொடுக்க வேண்டும். எங்களிடம் மிக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து வெளியிடத்து வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று இலாபம் சம்பாதிக்கின்றார்கள்.
மிகவும் கஸ்டப்பட்டு உழைக்கும் நாங்கள் கடனாளிகளாகவும் கூலிக்காரர்களாகவும் மட்டுமே இருக்கின்றோம் என கவலை தெரிவித்தனர்.ஏற்கனவே இந்திய மீனவர்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இன்னமும் தீர்வு இல்லாத நிலையில் இதற்கு எங்கே தீர்வு கிடைக்கப்போகின்றது என தெரிவித்தனர்.
முத்தரிப்புத்துறை மீனவர்களின் பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட கடற்தொழில்,நீரியல் வளத்துறை அதிகாரி பவநிதியிடம் வினவிய போது,,
சில மீன்பிடி கிராமங்களில் உள்ள முதலாளிகள் தொழிலாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வலைகள் இயந்திரங்களை கடனாக எடுத்து கொடுத்து தொழிலாளிகளை அடிமைகளாக்கி வைத்து முதலாளிகள் சொல்வது தான் விலை எனும் நிலையில் உள்ளது.
இவற்றை தீர்க்கும் வகையில் எம்மால் ஏற்படுத்தப்பட்ட மீனவ கூட்டுவு சங்கங்களுடன் இணைந்து மீனவர்கள் செயற்படுவதன் மூலம் முதலாளிகளிடம் வேண்டிய கடன்களை கட்டி முடிக்க முடியும். அதன் பின் அவர்கள் பிடிக்கும் மீன்களை கூட்டுறவு சங்கங்களினூடாக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
இப்படி நாம் எடுத்த முயற்சிகள் அனைத்து தோல்வி கண்டதால் இப்படியான முதலாளிகளின் வலையமைப்பை உடைக்க முடியாதுள்ளது. இதற்கான மாற்று வழியை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.