இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் பீட்டர் அல்பர்ட் நிஸ்ட்ரோம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆவர் தனது கடிதத்தில், 28 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த புலனாய்வில் கலவையான தடயங்களும், முரண்பட்ட அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் ஏழு பேரும் அப்பாவிகள். எனவே அவர்கள் ஏழு பேரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ அவர்களின் விடுதலையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.