ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக விரோதமாக கைப்பற்ற நினைத்த மகிந்த ராஜபக்ச தரப்பின் கோரத்தாண்டவமே இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு கூறினார்.
நாட்டில் மிகவும் மதிப்பிற்குரிய புனித ஆவணமாக பாதுகாக்கப்படும் அரசியலமைப்பு பிரதியினால் தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட அகோதரத் தன்மையையும் ஜனநாயக விரோத தன்மையையும் இவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாள் கரி நாள் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகரை தாக்க முயல்வதனையும் பொலிஸார் அவரை பாதுகாக்க முயன்றதையும் உலகமே பார்த்துள்ளதாக ஹக்கீம் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதை தடுக்க மகிந்த தரப்பு முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்த அவர், இனி மகிந்த அரசாங்கம் என்று அழைக்க முடியாது என்றும் ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பார் என நம்பபுவதாகவும் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கைப் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ஹர்ஷா டி சில்வா. இன்றைய சூழ்நிலை பாராளுமன்றத்தை தொடர்ந்து முன்னெடுப்பது கடினமானது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஹர்ஷா, யாருடைய பக்கம் பெரும்பான்மை இருக்கிறது என்பதும் புலனாகியிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/KuruparanNadarajah/posts/2241596386077850