“அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை நேசிக்கும் அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடனும் அமைதியாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளும் தரப்பின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என, சபாநாயகர் எழுத்து மூலமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார் என, சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இவ்விடயத்தினை கருத்திற் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.