ஆந்திராவில் சோதனை மேற்கொள்வதற்கு சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.டெல்லி சிறப்பு காவல்துறைப் படையின் கீழ், 1963ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிர்வாக ஆணையின் காரணமாக சிபிஐ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சட்டப்படி டெல்லி மீது முழு அதிகாரத்தை சிபிஐ கொண்டுள்ள போதும் ஏனைய மாநிலங்களில் சோதனை அல்லது விசாரணையை மேற்கொள்ள அம்மாநில அரசின் பொது ஒப்புதலை சிபிஐ பெற வேண்டியது அவசியமாகும்.
இந்தநிலையில் ஆந்திராவில் தெலுங்குதேச கட்சியை சேர்ந்த சிரேஸ்ட தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தமை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சங்கடத்தில் ஆழ்த்தியது. இதனால் அவர் சிபிஐ, வருமானவரித் துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளை மத்திய அரசு தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஆந்திராவிற்கு சிபிஐ நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு சிறப்பு அரசாணையை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் திகதி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதுதான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை கடந்த ஓகஸ்ட் மாதம் ஆந்திர அரசு புதுப்பித்திருந்த நிலையில், மூன்று மாத்திற்குள்ளாகவே அதனை திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.