சீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ம் திகதி அமெரிக்கரான லோரன்ஸ் புரூஸ் பைரன் என்பவர் சீனாவிலிருந்து சட்ட விரோதமாக வட கொரியாவினுள் நுழைந்த வேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர், அமெரிக்காவின் மத்திய உளவுப்படை சி.ஐ.ஏ. உத்தரவின்பேரில்தான் வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வடகொரியா இவ்வாறு சட்டவிரோதமாக நுழையும் யாரும் எளிதில் விடுவிக்கப்படாதநிலையில் அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை காரணமாகத்தான் அவரை விடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்தான் கடந்த வருடம் தென்கொரியாவில் சட்டவிரோதமாக நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு திருப்பியினுப்பப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.