ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு தடை விதித்துள்ள அம்மாநில அரசு இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றுள்ளது. டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற மத்திய புலனாய்வு அமைப்பான மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்ற சதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார் 187 பிரிவுகள் மற்றும் 67 மத்திய அரசு சட்டங்களின் படி பொது அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குற்ற வழக்குகளின் விசாரணைக்காக மாநில அரசுகளின் பிரத்யேக அனுமதியின்றி அந்தந்த மாநிலங்களில் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனினும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு வழங்கியுள்ள பொது அனுமதியை திரும்ப பெறுவதாக ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. போன்ற உயர் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஆந்திர மாநில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆந்திராவுக்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
இதனையடுத்து மேற்கு வங்காள அரசும் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு உள்ள பொது அனுமதியை நேற்று திரும்ப பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய கட்சித்தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்
இதேவேளை ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளின் இந்த முடிவுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார்.