குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை நிஷாந்த சில்வாவே முன்னெடுத்து வந்திருந்தார். இந்தநிலையில் உடனும் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது
இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட 60 குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்து, பல சந்தேகநபர்களை கைதுசெய்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்ததும் நிஷாந்த சில்வா தலைமையிலான இரகசியப் காவல்துறைக் குழு என்பதுடன், கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு பிரதானியொருவர் பாதுகாப்பு வழங்கியமை தொடர்பான விசாரணைகளையும் நிஷாந்த சில்வா முன்னெடுத்து வந்திருந்தார்.
அவர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து நீர்கொழும்பு பிரிவின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.