நாடு முன்னொருபோதும் இல்லாதவாறு அரசியல் ரீதியில் பிளவுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என மிலிந்த மொறகொட சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யும் நடுநிலையான பிரதமர் மற்றும் காபந்து அரசாங்கத்துடன் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுநிலையான நிலை பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாதென்றால் அதற்கு பதிலாக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும், தேசிய பட்டியல் மூலம் அத்தகைய ஒருவரை பாராளுமன்றத்திற்கு நியமிக்க முடியும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.