எவரும் எதிர்பார்க்காத முறையில் ஒக்டோபர் 26 மூண்ட அரசியல் நெருக்கடி இன்னமும் தொடருகிறது. இப்போது அது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த எதிர்பாராத தீர்மானம் சந்தேகப்படாதிருந்த ஒரு நாட்டின் மீது பிரச்சினையைக் கட்டவிழ்த்துவிட்டது.
ராஜபக்ச பிரதமர் என்ற வகையில் தனது புதிய பதவியை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இயலாதவராக இருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும். கடந்த இரு வாரங்களில் இரு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 122 பேர் புதிதாக நியயமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதுடன் அது தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். இரு சந்தர்ப்பங்களிலுமே ஜனாதிபதி சிறிசேன பிரேரணை தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தவறானவை என்று காரணம் கூறி வாக்கெடுப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க மறுத்திருக்கிறார். இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலைக்கு விரைவாக முடிவு கிட்டவேண்டும் என்று முழு நாடுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
விரைவாகத் தீர்த்துவைக்கப்படாவிட்டால், இந்த நெருக்கடியினால் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.
துரதிர்ஷ்டவசமான இந்த அரசியல் நாடகத்தின் பிரதான பாத்திரம் ஜனாதிபதி சிறிசேனவே. தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு தனது கட்சி அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு அதன் பிரதமரையும் பதவிநீக்கியதுடன் பாராளுமன்றத்தையும் கலைத்ததன் மூலமாக நெருக்கடியை உருவாக்கியவரே அவர்தான்.பாராளுமன்றக் கலைப்பை இடைநிறுத்தம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அந்த கடுமையான நடவடிக்கையை எடுத்ததில் ஜனாதிபதி உகந்த நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறியிருக்கின்றது. தேசிய சொத்துக்கள் விற்பனை, பிரதமரிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்காமை,தனக்கு எதிரான கொலைச்சதி முயற்சி தொடர்பில் போதுமான கவனம் செலுத்தப்படாதமை ஆகியவையே பிரதமரை பதவிநீக்குவதற்கு தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கான முக்கிய காரணிகள் என்று ஜனாதிபதி விளக்கமளித்தார். தனது நடவடிக்கைகள் மூலமாக நெருக்கடியைத் தோற்றுவித்த பிரதான பாத்திரம் என்ற வகையில் ஜனாதிபதியின் ஜனாதிபதியின் நோக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டியது முக்கியமானதாகும். பகிரங்கமாகக் கூறப்பட்டவற்றுக்கு அப்பால் மேலதிகமாக வேறு நோக்கங்களும் அவருக்கு இருந்திருக்கக்கூடும்.
இலங்கை ஜனாதிபதி முறையையும் பாராளுமன்ற முறையையும் கலப்பாகக்கொண்ட ஆட்சிக்கட்டமைப்பைக் கொண்டதாகும்.2015 ஏப்ரிலில் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை ஜனாதிபதி பதவியே மேன்மையான ஆதிக்கம் கொண்ட நிறுவனமாக விளங்கியது.பாராளுமன்றமும் நீதித்துறையும் அதற்கு சமமானவையல்ல.காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்தபோது ஜனாதிபதியுடன் ஒப்பிடுமாபோது தான் ஒரு பியோனைப் போன்றவரே தவிர வேறொன்றுமில்லை என்று குறிப்பிடடார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் விருப்பங்களுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார் எனமபது எம்மெல்லோருக்கும் தெரியும்.அதிகாரச் சமநிலையை மாற்றும் நோக்குடனேயே 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் எவர் பதவி வகித்தாலும் அவர்கள் ஒருவரை மற்றவர் மதித்துச் செயற்படக்கூடிய புதியதொரு ஏற்பாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்குமா இல்லையா என்பதிலேயே இப்போது இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.தனிப்பட்ட நோக்கங்கள் முதன்மையிடத்தைப் பிடித்துவிட்டன என்பதற்கான அறிகுறிகளே இப்போது தெரிகின்றன.
அடக்குமுறை இல்லை
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு விடுபடுவதற்கு ஜனாதிபதி சிறிசேன தீர்வின் ஒரு அங்கமாக மாறவேண்டியது அத்தியாவசியமானதாகும்.நெருக்கடி குறித்து ஆராய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) அதில் பங்கேற்காமல் பகிஷ்கரித்தது.
ஜனாதிபதியே நெருக்கடியைத் தோற்றுவித்தவர் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு. ஆனால், தீர்வுக்கும் அவரே முக்கியமானவராக இருக்கிறார்.சாத்தியமான அளவுக்கு ஆக்கபூர்வமான முறையில் ஈடுபடுத்தவேண்டிய தேவை இருக்கிறது. இதுவரையில் ஜனாதிபதி தனது எல்லைக்கோட்டை மீறவில்லை.தனது நடவடிக்கைகளுக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதுவரையில் அவை ஆபத்தான கட்டத்துக்குப் போகவில்லை. அவர் பதவிக்கு வருவதற்து முன்னரான காலகட்டத்தில் நிலைமை இவ்வாறிருக்கவில்லை. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்பட்டார்கள்; காணாமல்போகச் செய்யப்பட்டார்கள்.ஆனால், ஜனாதிபதியின் அண்மைக்காலப் போக்குகளை அவதானிக்கும்போது அவர் எவ்வாறு செயற்படுவார் என்பதை கூறமுடியாத ஒரு தடுமாற்ற நிலை காணப்படுகிறது.அவரது திடீர் நடவடிக்கைகளையும் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் விடாப்பிடியாக நடந்துகொள்வதையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அடக்குமுறையில் அவர் திடீரென்று இறங்குவதற்கான ஆபத்தும் வரலாம்.
இத்தகைய சூழ்நிலையில், அரசியல் முட்டுக்கட்டை நிலையில் இருந்து விடுபடுவதற்கு வழிதேடுமுகமாக கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி சிறிசேன கூட்டிய பாராளுமன்றக் கட்சிளின் கூட்டத்தில் தீர்வொன்றைக் காணமுடியாமல்போனமை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். இரு தரப்புகளுமே ஏட்டிக்குப்போட்டியான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் அதன் நேச அணிகளும் பாராளுமன்றத்தில் உகந்த நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்ற தனது கோரிக்கையை ஜனாதிபதி மீண்டும் முன்வைத்திருக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் சபையில் விழைவிக்கப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் ஐ.த.க.வும் நேச சக்திகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரு தடவைகள் கொண்டுவந்தன. அவற்றின் அடிப்படையில் செயற்படுவதற்கு சிறிசேன இரு சந்தர்ப்பங்களிலும் மறுத்தார்.செயன்முறைகள் திருப்திகரமானவையாக இல்லை என்று அதற்கு அவர் காரணமும் கூறினார்.குமார் வெல்கம போன்ற தனது தரப்பு மூத்த அரசியல்வாதிகள் ” பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக்காட்ட முடியாவிட்டால் அரசாங்கம் பதவியில் இருந்து இறங்கவேண்டும்” என்று கூறியதற்கு மத்தியிலும் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டார்.
உகந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற ஜனாதிபதியின் வலியுறுத்தலில் உள்ள பிரச்சினை பாராளுமன்றத்தில் தற்போது காணக்கூடியதாக இருக்கின்ற யதார்த்தங்களை அவர்கள் கருத்தில் எடுக்கவில்லை என்பதேயாகும்.வெகுஜன ஊடகங்களில் ஔிப்பப்பட்ட பாராளுமன்றக் காட்சிகள் முன்னென்றுமில்லாத வகையிலானவையும் அதிர்ச்சி தருபவையுமாகும்.கதிரைகள் தூக்கிவீசப்பட்ட விதமும் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிராயுதபாணிகளான பொலிஸ்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் திகைக்கவைத்தன.புனித பைபிள நூல் கூட ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.இத்தகையதொரு பின்புலத்தில், உகந்த நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டுமென்று ஜனாதிபதி திரும்பத்திரும்ப வலியுறுத்துவது தனக்கு விருப்பமில்லாத விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கத்திலா என்ற கேள்வி எழுகிறது.பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவேண்டுமென்றால் பின்பற்றவேண்டிய 12 அம்ச செயன்முறைகளை அரசாங்கம் விபரித்துக் கூறியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றுவதானால் நீண்ட காலஅவகாசம் தேவை.அலுவல்களைத் தாமதிக்கவைப்பதே இலக்காக இருக்கிதோ என்று இதனால் சந்தேகம் எழுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு சாத்தியமான இரு செயன்முறைகள் இருக்கின்றன என்றும் தாங்கள் கடைப்பிடித்திருக்கும் செயன்முறை ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று சட்டப்படி செல்லுபடியாககா கூடியதே என்றும் அவருடனான பேச்சுவார்த்தைகளின்போது ஐ.தே.க.வும் அதன் நேசசக்திகளும் எடுத்துக் கூறின.கடந்தவாரம் பாராளுமன்றத்தில் அமளிதுமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுமே சட்டப்படி செல்லுபடியானவை என்பதும் அவர்களது நிலைப்பாடாக இருந்தது.மறுபுறத்திலே, தனது தரப்பினரால் விபரிக்கப்பட்டுள்ள செயன்முறையே பின்பற்றப்படவேண்டியதாகும் என்று ஜனாதிபதி விலியுறுத்தினார்.நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே இழுபறிநிலை தொடருமானால், மத்தியஸ்தம் வகித்து பிரச்சினையைத் தீர்க்குமாறு நீதித்துறையை நாடவேண்டியது அவசியமாதும் தவிர்க்கமுடியாததாகவும் போய்விடும்போல் தெரிகிறது.
நேர்மறையான வியாக்கியானம்
இந்த அரசியல் அதிகாரப் போராட்டத்தில் இடருக்குள்ளாவது அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதியாகப் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கமேயாகும்.இந்த ஒழுக்கமே அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை நாகரிகப்படுத்துகிறது.ஜனாதிபதி சிறிசேனவுக்கு தவறானமுறையில் வழங்கப்பட்டிருப்பதைப்போன்று இந்தச் சட்டங்கள் வெறுமனே நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்கள் அல்ல.பதிலாக அவை மீறமுடியாத — மீறக்கூடாத சட்டவிதிகளாகும்.அதுவும் குறிப்பாக அதிகாரமாற்றம் இடம்பெறுகின்ற வேளைகளில் அவை மிகவும் முக்கியமானவையாகும். இலங்கையில் இதுகாலவரையில் ஒரு அரசாங்கத்தில் இருந்து இன்னொரு அரசாங்கத்துக்கு அதிகார மாற்றம் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியானமுறையிலேயே இடம்பெற்றுவந்திருக்கிறது.தற்போதைய பிலச்சினையில் பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் செயலை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது.இத்தடவை ‘ ஆட்ட விதிகள் ‘ உறுதியாகப் பின்பற்றப்படாவிட்டால், அடுத்த தடவை மீறல்கள் மிக மோசமானவையாக இருக்கும்.
அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ அந்தளவுக்கு நாட்டின் பொருளாதாரத்துக்கான பாதிப்பும் தங்களது தலைவர்கள் மீதான மக்களின் நம்பிக்கைக்கான பாதிப்பும் கூடுதலானவையாக இருக்கும்.கெடுதிக்கான அறிகுறிகள் அச்சுறுத்துகின்றன.இதுவரையில் வன்முறை பாராளுமன்றத்துக்குள்ளேயே இடம்பெற்றிருக்கிறது.அந்த வன்முறைக்குப் பொறுப்பான கட்சிகளில் ஒன்று ஜனாதிபதியின் தலைமையிலானது.வன்முறை திடீரென்று வெளியிலும் பரவக்கூடும்.பாராளுமன்றத்தை இயங்கமுடியாமல் செய்கிற ஒரு அரசியல் முட்டுக்கட்டை நிலை ஜனநாயகத்துக்கே ஆபத்துக்களைத் தோற்றுவிக்கும். அது ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்ததைப் போன்று, அரசியல் கட்சிகள் மக்களை அணிதிரட்டிப்போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கும். இரு தரப்பினராலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்பேணிகள் அமைதியானவையாக இருந்ததால் இதுவரையில் பாதுகாப்புப் படைகள் தலையீடு செய்யவேண்டிய நிலை ஏற்படவில்லை.ஆனால், இதை மெத்தனமாக எடுத்துக்கொள்ளவும் கூடாது. ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகின்ற ஒரு சிறு குழுவினரின் விசமச்செயல் ஒன்றே போதும் பாரதூரமான விளைவுகளைக்கொண்டுவரக்கூடிய பரவலான வன்முறைகளை மூளவைப்பதற்கு.
ஞாயிறன்று பாராளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ‘ நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது அரசாங்க மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் என்றும் அது பொதுமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையைப் பெறவேண்டியது அவசியமானதாகும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியதாக’ தெரிவிக்கப்பட்டிருந்தது.அந்த அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெயர்மூல வாக்கெடுப்பின் வாயிலாக அல்லது இலத்திரனியல் வாக்குப்பதிவு மூலம் காண்பிக்கப்டவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி கூறியதாகவும் அறிவிக்கப்பட்டது.பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அதை மேற்பார்வை செய்வதற்கு ஜனாதிபதி அங்கு பிரசன்னமாக இருக்கவேண்டும் என்று வண.ஒமல்பே சோபித தேரோ கூறியிருக்கிறார்.அரசியல் முட்டுக்கட்டைநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசியமானது என்று தான் கருதுகின்ற உகந்த நடைமுறைகள் வாக்கெடுப்பின்போது பின்பற்றுப்படுவதை உறுதிசெய்துகொள்வதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குவந்து தனக்கு உரித்தான ஆசனத்தில் அமரவேண்டும்.நெருக்கடியைத் தோற்றுவித்தவர் என்ற வகையில் தீர்வுக்கான முயற்சிகளையும் அவரே முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். (வீரகேசரி)